கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மூன்றாவது அணுஉலை இன்னும் ஒரு வருடத்தில் செயல்படத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அந்த அணுமின் நிலையத்தின் இணை இயக்குநர் ஜோதீஷ் குமார் இன்று திருவண்ணாமலையில் புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தற்போது கல்பாக்கத்தில் தலா 170 மெகாவாட் திறன் கொண்ட இரு அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும், மூன்றாவது அணுஉலையின் கட்டுமானப் பணி விரைவில் முடிவடைந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அணுஉலையில் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவித்த அவர், இது ஒரு வருடத்தில் செயல்படத் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, மாநிலத்தின் பங்காக தமிழகத்திற்கு 200 மெகாவாட் மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் ஜோதீஷ் குமார் கூறினார். மேலும், கல்பாக்கத்தில் நான்காவது மற்றும் ஐந்தாவது அணுமின் நிலையங்கள் கட்டுவதற்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, அவை சுமார் 6 வருடங்களில் செயல்படத் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.