காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு, போலி பட்டு உற்பத்தி, போலி பட்டு கூட்டுறவு சங்கங்கள்


    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் மக்கள் பிரச்னைகளை அலசுவதற்காக களமிறங்கியுள்ளது புதிய தலைமுறை. அதன்படி, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக காஞ்சிபுரத்தில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளை ஆய்வு செய்துள்ளது புதிய தலைமுறையின் களஆய்வு குழு.
புதிய தலைமுறையின் கள ஆய்வு:
    புதிய தலைமுறை செய்திக்குழு நடத்திய கலந்தாய்வில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு, போலி பட்டு உற்பத்தி, போலி பட்டு கூட்டுறவு சங்கங்கள் ஆகியனவறறால் நெசவாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது ஒரு புறம் இருக்கு காஞ்சிபுரத்தில் 100க்கும் மேற்பட்ட பன்னாட்டு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. ஏரி , குளங்கள் ஆற்றுப்படுகையில் இருந்து மணல் கொள்ளையடிக்கப்படுவதால், விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
   சுற்றுச்சூழலும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரத்தில் நகரப்புறம் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. மற்ற நகராட்சிகளில் இருந்து குப்பைகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீரின் தன்மை மாறி வருகிறது. கழிவு நீர் கால்வாய்கள் திட்டமிடப்படவில்லை. இதனால் மக்களின் பொதுச் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இருந்தாலும் அரசு தரப்பில் மருத்துவ சேவைகள் ஏதும் மேம்படுத்தப்படவில்லை என்பன தெரியவந்துள்ளது.
ஆயிரம் கோயில்களின் நகரம், இந்தியாவில் 7 புனித நகரங்களில் ஒன்று என பல்வேறு பெருமைகளை கொண்டது காஞ்சிபுரம் மாவட்டம். இந்த மாவட்டத்தில் 4 வருவாய் கோட்டங்கள், 10க்கும் மேற்பட்ட வட்டங்கள் இருக்கின்றன, 12 நகராட்சிகள் இருக்கின்றன. 1200க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் இருக்கின்றன. இந்த மாவட்டத்தில் நெசவுத் தொழில் தாண்டி விவசாயமும் பிரதான தொழிலாக இருக்கிறது.
பட்டுப் போகும் பட்டு:
   பட்டுக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரத்தில் பட்டு நெசவாளர்களின் வாழ்க்கை பட்டுப்போய் வருகிறது. சுற்றுலாத் தலமாக விளங்கும் காஞ்சிபுரம், பட்டுப் புடவைகளுக்கும், கோயில்களுக்கும் பெயர் பெற்று விளங்குகிறது. இங்கு பாரம்பரியமான பட்டு நெசவுத்தொழிலில் 20க்கும் மேற்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், 300க்கும் மேற்பட்ட தனியார் சங்கங்களும் ஈடுபட்டு வருகின்றன. இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அண்மைக்காலமாக மின்வெட்டு, போலிப்பட்டு போன்ற காரணங்களால் தாங்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் நெசவாளர்கள்.
   இது போன்ற காரணங்களால், பலர் தனியார் சங்கங்களுக்கு வேலைக்குச் சென்றாலும் அங்கும் போதுமான அளவு ஊதியம் கிடைக்கவில்லை என்கின்றனர் இவர்கள். அதோடு தரமற்ற கோராக்களை வாங்க வற்புறுத்தப்படுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். புடவைகளை நெசவு செய்ய அதிகளவு இடம் தேவைப்படுவதால், வீடு வாடகைக்கு கிடைப்பதில்லை எனக் கவலை தெரிவிக்கும் இவர்கள், 25 ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டுறவு சங்கங்களால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளும், எப்போது இடிந்து விழுமோ? எனும் அச்சத்திலேயே வாழ்ந்து வருவதாகக் கூறுகின்றனர்.
பொலிவு பெறுமா? நெசவுத்தொழில்...
    இது போன்ற பல காரணங்களால், நெசவாளர்கள் இந்த தொழிலை விடுத்து, வேறு தொழிலுக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நெசவாளர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி வரும் போலிப்பட்டு கூட்டுறவு சங்கங்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தங்களின் வாழ்வு செழிக்கும் என்பதே பட்டு நெசவாளர்கள் கருத்து.

   காஞ்சிபுரம் மாவட்டம் நெசாவளர்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து தமிழ்நாடு கைத்தறி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் முத்துக்குமார் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில்: நெசாவளர்களுக்கு என்று 1983ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் எதையும் மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை. இதனால் நெசவாளர்கள் துயரத்தில் இருக்கின்றனர் என்றார்.