பொதுமக்கள் பார்வைக்கு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வெள்ளிக்கிழமை முதல் (நவ. 22) திறந்துவிடப்படுகிறது.
Pasumai Nayagan பசுமை நாயகன் thagavalthalam

     துராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கும் சீசன் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் பார்வைக்கு இச்சரணாலயம் வெள்ளிக்கிழமை முதல் (நவ. 22) திறந்துவிடப்படுகிறது.
       செங்கல்பட்டுக்கு தென்மேற்கில் செங்கல்பட்டு - உத்தரமேரூர் சாலையில் 25 கி.மீ. தொலைவில் உள்ளது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை இங்கு வெளிநாட்டுப் பறவைகள் தங்கி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வது வழக்கம். நீர் நிறைந்த பகுதிகளில் பறவைகள் தங்கி ஓய்வு எடுக்கின்றன. வேடந்தாங்கல் பகுதியைச் சுற்றியுள்ள மதுராந்தகம், வெள்ளபுதூர், வளையபுதூர், உத்தரமேரூர், மலைவையாவூர் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் இருந்து வேடந்தாங்கல் ஏரிக்கு நீர்வரத்து செய்யப்படுகிறது.
     கடந்த சிலநாள்களாக பெய்து வந்த கனமழை காரணமாக ஏரிகளில் இருந்து பெறப்படும் நீர் பொதுப்பணித் துறையினரால் கட்டப்பட்ட இரண்டு பெரிய கால்வாய்கள் வழியாக வந்து வேடந்தாங்கல் ஏரியின் நீர்மட்டத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது.
   வேடந்தாங்கல் ஏரியில் நீர் நிரம்பியுள்ள நிலையில் சீசனும் தொடங்கிவிட்டது. பல தேசங்களில் இருந்து பறவைகள் வேடந்தாங்கலுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளன. தற்போது வேடந்தாங்கலுக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.கீழே சிறுத்தும் அகன்று விரிந்த கிளைகளும் கொண்ட கடம்ப மரங்கள்தான் இந்த பறவைகளின் தேர்வாக உள்ளது. பறவைகளுக்குப் பிடித்த இந்த கடம்ப மரங்கள் வேடந்தாங்கல் ஏரிப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. கூடுகட்டி வசிப்பதற்கு ஏற்றதாக உள்ளதால் பறவைகள் இப்பகுதியை தேர்ந்தெடுக்கின்றன. இவற்றின் வரவை எதிர்நோக்கி வனத்துறையினர் அதிக எண்ணிக்கையில் கடம்ப மரங்களை வளர்த்துள்ளனர்.
     மேலும் 73 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவின் பழமையான நீர்ப் பறவைகளின் சரணாலயமாக விளங்குகிறது. மேலும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏரிக்குள் வளர்ந்துள்ள கடம்ப மரங்களில் கூடுகட்டி வாழும் பறவைகளை கண்டு களிக்கும் வகையில் ஏரிக்கரையோரமாக 1.4 கி.மீ.தொலைவில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க உயரமான பரண் அமைக்கப்பட்டு பைனாகுலர் மூலமாக பறவைகளை கண்ணருகில் பார்த்து ரசிக்கும் வசதியையும் வனத்துறையினர் செய்துள்ளனர்.
     கனடா, சைபீரியா, பங்களாதேஷ், ஆஸ்திரேலியா ஆகிய குளிர்பிரதேச நாடுகளிலிருந்து மிகவும் அரிதான 26 பறவை வகைகள் உள்பட 45 ஆயிரம்பறவையினங்கள் இங்கு வந்து தங்கிச் செல்வது வழக்கம். கொக்கு வகைகள், நீர்காகங்கள், நாரைகள், வெள்ளை நாரை, கூழைக்கடா, நைட்ஹெரான், க்ரே ஹெரான், ஸ்பூன்பில், லிட்டில் எக்ரெட், ஒயிட் இபிஸ், கேட்டில் எக்ரெட், பின்டெய்ல் என்னும் ஊசிவால் வாத்து, டாப் சிக், ஷோவல்லர டக் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் தங்கள் நாட்டிலிருந்து வேடந்தாங்கலுக்கு வந்து தங்கி இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு விடைபெற்றுச் செல்கின்றன.
    மேலும் குளிர் பிரதேசங்களில் இருந்து வரும் உள்ளான், பழுப்பு வாலாட்டி போன்ற பறவையினங்களுடன் உள்நாட்டுப் பறவைகளான வெள்ளை அரிவாள் மூக்கன், குருட்டு கொக்கு, நத்தை குத்தி நாரை போன்ற பறவைகளும் வேடந்தாங்கல் ஏரிக்கு வருகை தருகின்றன.இச்சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கும் சீசன் தொடங்கியுள்ள நிலையில், வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள இச்சரணாலயம் பொதுமக்கள் பார்வைக்கு வெள்ளிக்கிழமை முதல் திறக்கப்படுகிறது.
    தங்கும் வசதிகள் தேவை:இச்சரணாலயத்துக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக குடிநீர் வசதி, கழிப்பிடம் மற்றும் பறவைகளை கண்டுகளிக்க கூடுதல் கோபுரங்களையும் அமைத்துள்ளனர். ஆனால் இங்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.
22ம் தேதி முதல் சரணாலயம் திறப்பு
    வேடந்தாங்கல் நாட்டின் பழமையான நீர்ப் பறவைகள் சரணாலயமாகும். கனடா, சைபீரியா,ஆஸ்திரேலியா ஆகிய குளிர்பிரதேச நாடுகளிலிருந்து மிகவும் அரிதான 26 பறவை வகைகள் உள்பட 45 ஆயிரம் பறவையினங்கள் இங்கு வந்து தங்கிச் செல்வது வழக்கம்.
                                                                             -பசுமை நாயகன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு, போலி பட்டு உற்பத்தி, போலி பட்டு கூட்டுறவு சங்கங்கள்


    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் மக்கள் பிரச்னைகளை அலசுவதற்காக களமிறங்கியுள்ளது புதிய தலைமுறை. அதன்படி, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக காஞ்சிபுரத்தில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளை ஆய்வு செய்துள்ளது புதிய தலைமுறையின் களஆய்வு குழு.
புதிய தலைமுறையின் கள ஆய்வு:
    புதிய தலைமுறை செய்திக்குழு நடத்திய கலந்தாய்வில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு, போலி பட்டு உற்பத்தி, போலி பட்டு கூட்டுறவு சங்கங்கள் ஆகியனவறறால் நெசவாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது ஒரு புறம் இருக்கு காஞ்சிபுரத்தில் 100க்கும் மேற்பட்ட பன்னாட்டு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. ஏரி , குளங்கள் ஆற்றுப்படுகையில் இருந்து மணல் கொள்ளையடிக்கப்படுவதால், விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
   சுற்றுச்சூழலும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரத்தில் நகரப்புறம் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. மற்ற நகராட்சிகளில் இருந்து குப்பைகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீரின் தன்மை மாறி வருகிறது. கழிவு நீர் கால்வாய்கள் திட்டமிடப்படவில்லை. இதனால் மக்களின் பொதுச் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இருந்தாலும் அரசு தரப்பில் மருத்துவ சேவைகள் ஏதும் மேம்படுத்தப்படவில்லை என்பன தெரியவந்துள்ளது.
ஆயிரம் கோயில்களின் நகரம், இந்தியாவில் 7 புனித நகரங்களில் ஒன்று என பல்வேறு பெருமைகளை கொண்டது காஞ்சிபுரம் மாவட்டம். இந்த மாவட்டத்தில் 4 வருவாய் கோட்டங்கள், 10க்கும் மேற்பட்ட வட்டங்கள் இருக்கின்றன, 12 நகராட்சிகள் இருக்கின்றன. 1200க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் இருக்கின்றன. இந்த மாவட்டத்தில் நெசவுத் தொழில் தாண்டி விவசாயமும் பிரதான தொழிலாக இருக்கிறது.
பட்டுப் போகும் பட்டு:
   பட்டுக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரத்தில் பட்டு நெசவாளர்களின் வாழ்க்கை பட்டுப்போய் வருகிறது. சுற்றுலாத் தலமாக விளங்கும் காஞ்சிபுரம், பட்டுப் புடவைகளுக்கும், கோயில்களுக்கும் பெயர் பெற்று விளங்குகிறது. இங்கு பாரம்பரியமான பட்டு நெசவுத்தொழிலில் 20க்கும் மேற்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், 300க்கும் மேற்பட்ட தனியார் சங்கங்களும் ஈடுபட்டு வருகின்றன. இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அண்மைக்காலமாக மின்வெட்டு, போலிப்பட்டு போன்ற காரணங்களால் தாங்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் நெசவாளர்கள்.
   இது போன்ற காரணங்களால், பலர் தனியார் சங்கங்களுக்கு வேலைக்குச் சென்றாலும் அங்கும் போதுமான அளவு ஊதியம் கிடைக்கவில்லை என்கின்றனர் இவர்கள். அதோடு தரமற்ற கோராக்களை வாங்க வற்புறுத்தப்படுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். புடவைகளை நெசவு செய்ய அதிகளவு இடம் தேவைப்படுவதால், வீடு வாடகைக்கு கிடைப்பதில்லை எனக் கவலை தெரிவிக்கும் இவர்கள், 25 ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டுறவு சங்கங்களால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளும், எப்போது இடிந்து விழுமோ? எனும் அச்சத்திலேயே வாழ்ந்து வருவதாகக் கூறுகின்றனர்.
பொலிவு பெறுமா? நெசவுத்தொழில்...
    இது போன்ற பல காரணங்களால், நெசவாளர்கள் இந்த தொழிலை விடுத்து, வேறு தொழிலுக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நெசவாளர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி வரும் போலிப்பட்டு கூட்டுறவு சங்கங்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தங்களின் வாழ்வு செழிக்கும் என்பதே பட்டு நெசவாளர்கள் கருத்து.

   காஞ்சிபுரம் மாவட்டம் நெசாவளர்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து தமிழ்நாடு கைத்தறி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் முத்துக்குமார் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில்: நெசாவளர்களுக்கு என்று 1983ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் எதையும் மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை. இதனால் நெசவாளர்கள் துயரத்தில் இருக்கின்றனர் என்றார்.

வெவ்வேறு இடங்களில் மணல் கொள்ளை: 11பேர் கைது

     காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு பாலாற்றுப்படுகையில் அனுமதியின்றி மணல் அள்ளிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்கள் காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மணல் கடத்த உதவியதாக 4 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    இதேபோல்,சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள வைகை ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.அதன் உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
   தப்பியோடிய லாரி ஓட்டுநர் ஒருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.ஆற்றில் மணல் அள்ளப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மூன்றாவது அணுஉலை இன்னும் ஒரு வருடத்தில் செயல்படத் தொடங்கும்


    கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மூன்றாவது அணுஉலை இன்னும் ஒரு வருடத்தில் செயல்படத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அந்த அணுமின் நிலையத்தின் இணை இயக்குநர் ஜோதீஷ் குமார் இன்று திருவண்ணாமலையில் புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
  தற்போது கல்பாக்கத்தில் தலா 170 மெகாவாட் திறன் கொண்ட இரு அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும், மூன்றாவது அணுஉலையின் கட்டுமானப் பணி விரைவில் முடிவடைந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
  இந்த அணுஉலையில் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவித்த அவர், இது ஒரு வருடத்தில் செயல்படத் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
  இதையடுத்து, மாநிலத்தின் பங்காக தமிழகத்திற்கு 200 மெகாவாட் மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் ஜோதீஷ் குமார் கூறினார். மேலும், கல்பாக்கத்தில் நான்காவது மற்றும் ஐந்தாவது அணுமின் நிலையங்கள் கட்டுவதற்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, அவை சுமார் 6 வருடங்களில் செயல்படத் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கல்பாக்கத்தில் மூன்றாவது அணு உலை


பல் மருத்துவ கவுன்சிலின் தலைவர் குணசீலன்ராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு   தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சிலின் தலைவர் குணசீல ராஜன் வீட்டில் சிபிஐ காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
     மேல்மருவத்தூரில் இயங்கி வரும் தனியார் பல் மருத்துவ கல்லூரிக்கு முதுகலை படிப்புக்கு அனுமதி வழங்க 25 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக இந்திய பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினராக முருகேசன் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
   இது தொடர்பாக கல்லுாரி நிர்வாகிகள் மூவரையும் சிபிஐ காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் கடந்த நான்கு நாட்களாக நடத்திய விசாரணையில் லஞ்ச விவகாரத்தில் முருகேசனின் நண்பரான குணசீல ராஜனுக்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில், அவர் வீட்டில் 8 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் சோதனை நடத்தினர்.
    வேறு யாருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளதா? என்பதை அறியவும், அடையாறு காந்திநகர் பகுதியில் உள்ள குணசீல ராஜன் இல்லத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
                                            -இணைய செய்தியாளர் - s.குருஜி

மதுராந்தகம் அருகே திறக்கப்படாத மேம்பாலம்


காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ரயில்வே லெவல் கிராஸிங் (RAILWAY LEVEL CROSSING) பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் 2010-ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வந்தது. இந்த பணிகள் முடிக்கப்பட்டும் இன்னும் மேம்பாலம் திறக்கப்படாத காரணத்தினால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தங்கள் கோரிக்கை நிறைவேறியும், அதனை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர் காஞ்சிபுரம் மாவட்டத்து மக்கள். மதுராந்தகம் அடுத்துள்ள கடப்பேரி லெவல் கிராஸிங் (LEVEL CROSSING) பகுதியில் அமைக்கப்பட்ட மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டும் இன்னமும் திறக்கப்படாமல் இருக்கிறது. அங்குள்ள ரயில்வே கேட் நீண்ட நேரம் மூடியிருப்பதாகக் கூறும் சித்தாமூர், பவுஞ்சூர், செய்யூர், கடப்பாக்கம், சூணாம்பேடு உள்ளிட்ட கிராமத்தினர், இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகத் தெரிவிக்கின்றனர்.
இப்பிரச்சனைக்கெல்லாம் தீர்வாகத்தான் 24.7 கோடி ரூபாய் நிதியில் கட்டப்பட்டது மேம்பாலம். இப்பாலத்திற்கான கட்டுமான பணிகள் நிறைவேறிய போதும் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் மூடியிருக்கும் ரயில்வே கேட் வழியே சில வாகனங்கள் நுழைந்து செல்ல முற்படுவதால் விபத்து நேரிடும் ஆபத்து இருப்பதாக வாகன ஓட்டிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை இணை இயக்குனர் முகம்மதுவிடம் கேட்ட போது, மின் இணைப்பு வழங்குதல், தகவல் பலகை அமைத்தல் போன்ற பணிகள் நடந்து வருவதாகவும், மேம்பாலம் திறப்பதற்கான அறிவிப்பு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்..
                                                 -இணைய செய்தியாளர் - s.குருஜி