தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சிலின் தலைவர் குணசீல ராஜன் வீட்டில் சிபிஐ காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
மேல்மருவத்தூரில் இயங்கி வரும் தனியார் பல் மருத்துவ கல்லூரிக்கு முதுகலை படிப்புக்கு அனுமதி வழங்க 25 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக இந்திய பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினராக முருகேசன் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக கல்லுாரி நிர்வாகிகள் மூவரையும் சிபிஐ காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் கடந்த நான்கு நாட்களாக நடத்திய விசாரணையில் லஞ்ச விவகாரத்தில் முருகேசனின் நண்பரான குணசீல ராஜனுக்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில், அவர் வீட்டில் 8 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் சோதனை நடத்தினர்.
வேறு யாருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளதா? என்பதை அறியவும், அடையாறு காந்திநகர் பகுதியில் உள்ள குணசீல ராஜன் இல்லத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-இணைய செய்தியாளர் - s.குருஜி