மதுராந்தகம் அருகே திறக்கப்படாத மேம்பாலம்


காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ரயில்வே லெவல் கிராஸிங் (RAILWAY LEVEL CROSSING) பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் 2010-ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வந்தது. இந்த பணிகள் முடிக்கப்பட்டும் இன்னும் மேம்பாலம் திறக்கப்படாத காரணத்தினால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தங்கள் கோரிக்கை நிறைவேறியும், அதனை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர் காஞ்சிபுரம் மாவட்டத்து மக்கள். மதுராந்தகம் அடுத்துள்ள கடப்பேரி லெவல் கிராஸிங் (LEVEL CROSSING) பகுதியில் அமைக்கப்பட்ட மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டும் இன்னமும் திறக்கப்படாமல் இருக்கிறது. அங்குள்ள ரயில்வே கேட் நீண்ட நேரம் மூடியிருப்பதாகக் கூறும் சித்தாமூர், பவுஞ்சூர், செய்யூர், கடப்பாக்கம், சூணாம்பேடு உள்ளிட்ட கிராமத்தினர், இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகத் தெரிவிக்கின்றனர்.
இப்பிரச்சனைக்கெல்லாம் தீர்வாகத்தான் 24.7 கோடி ரூபாய் நிதியில் கட்டப்பட்டது மேம்பாலம். இப்பாலத்திற்கான கட்டுமான பணிகள் நிறைவேறிய போதும் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் மூடியிருக்கும் ரயில்வே கேட் வழியே சில வாகனங்கள் நுழைந்து செல்ல முற்படுவதால் விபத்து நேரிடும் ஆபத்து இருப்பதாக வாகன ஓட்டிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை இணை இயக்குனர் முகம்மதுவிடம் கேட்ட போது, மின் இணைப்பு வழங்குதல், தகவல் பலகை அமைத்தல் போன்ற பணிகள் நடந்து வருவதாகவும், மேம்பாலம் திறப்பதற்கான அறிவிப்பு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்..
                                                 -இணைய செய்தியாளர் - s.குருஜி